கருத்துக்கேட்பு ஒரு நாடகம்தான் பள்ளிகள் திறப்பு தான் ஒரே தீர்வு

கருத்துக்கேட்பு ஒரு நாடகம்தான் பள்ளிகள் திறப்பு தான் ஒரே தீர்வு.

பொங்கலுக்குப் பிறகு பள்ளிகளைத் திறக்கலாம் எனப் பெரும்பான்மையான பெற்றோர் கருத்துத் தெரிவித்துள்ளதாகக் கல்வித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கரோனா பரவல் காரணமாகத் தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தற்போது கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டாலும், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் திறக்கப்படவில்லை. கடந்த ஜூன் மாதம் திறக்கப்பட வேண்டிய பள்ளிகள் ஜனவரி மாதம் தொடங்கியும் திறக்கப்படவில்லை. இதனால், 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்காகப் பொங்கல் பண்டிகைக்குப் பிறகு பள்ளிகளைத் திறக்கப் பெற்றோர்களிடம் கருத்துக் கேட்க பள்ளிக் கல்வித்துறைக்குத் தமிழக அரசு உத்தரவிட்டது.

அதன்படி கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பெற்றோர்கள் கலந்துகொண்டு பள்ளிகள் திறப்புக் குறித்து தங்களது ஆலோசனைகளை வழங்கலாம் எனப் பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. அதன்படி, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள், தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளில் பெற்றோர்களுடனான கருத்துக் கேட்புக் கூட்டம் இன்று தொடங்கியது.

இதில், அந்தந்தப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தலைமையில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. இதில், மாணவர்களின் பெற்றோர்கள் கலந்துகொண்டு தங்களது கருத்துகளைப் பதிவு செய்தனர். இதில், பெரும்பான்மையான பெற்றோர்கள் பள்ளிகளைத் திறக்கலாம் என்றும், ஒரு சில பெற்றோர் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்த பிறகே பள்ளிகளைத் திறக்கலாம் என்றும் கருத்துத் தெரிவித்தாகக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்துக் கல்வித்துறை அதிகாரிகள் கூறும்போது, ''வேலூர் மாவட்டத்தில் 276 பள்ளிகளில் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் படிக்கின்றனர். அதேபோல ராணிப்பேட்டை மாவட்டத்தில் 224 பள்ளிகளிலும், திருப்பத்தூர் மாவட்டத்தில் 223 பள்ளிகளிலும் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் படிக்கின்றனர்.

கடந்த சில மாதங்களாக ஆன்லைன் மூலம் கல்வி பயின்று வரும் மாணவர்கள், தங்களது கல்வித் திறனை மேம்படுத்திக்கொள்ள, பொங்கல் பண்டிகைக்குப் பிறகு பள்ளிகளைத் திறக்கலாம் எனப் பெரும்பான்மையான பெற்றோர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். ஒரு சில பெற்றோர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். ஆனால், 85 சதவீதம் பேர் பள்ளிகளைத் திறக்கலாம் என்றே கருத்து தெரிவித்துள்ளனர்.

இன்று தொடங்கிய கருத்துக் கேட்புக் கூட்டம் வரும் 8-ம் தேதி வரை நடைபெறும். அதன்பிறகு அறிக்கையை அரசுக்கு அனுப்பி வைப்போம். தொடர்ந்து கல்வியாளர்கள், சுகாதாரத் துறையினர் கலந்தாலோசனை செய்து பள்ளிகளை திறப்பது குறித்து அறிவிப்பர். பள்ளிகளைத் திறந்தால் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்குப் பாடம் எடுக்க ஆசிரியர்கள் தயாராக உள்ளனர். அரசின் முடிவைப் பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுப்போம்'' என்று தெரிவித்தனர்.

பள்ளி திறக்க கருத்து கேட்பு நாடகம் நடத்தற அரசு டாஸ்மாக் கடைகள் திறக்க கருத்துகேட்பு நடத்த வேண்டியதுதானே

கருத்துக்கேட்பு என்பதே ஒரு கண்துடைப்பு. இப்பொழுதே சிலர் சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் கேரளா எல்லையோரம் அமைந்திருக்கின்ற நமது தமிழக மாவட்டங்களில் பறவை காய்ச்சல் பரவும் வாய்ப்புள்ளது. மேலும் கொரோனா வீரியம் குறைய வில்லை. எனவே பள்ளிகள் திறக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என ஆரம்பித்துவிட்டார்கள். இது மேலும் அரசியல் ஆக்கப்பட்டால், பள்ளிகள் மற்றும் மாணவர்களின் நலன் கேள்விக்குறிதான்