தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 9 மாதங்களாக மூடப்பட்டு உள்ள பள்ளிகளை மீண்டும் எப்போது திறக்கலாம் என்பது குறித்து இன்று முதல் கருத்து கேட்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.
பள்ளிகள் திறப்பு:
கொரோனா தொற்று அச்சம் காரணமாக கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. நடப்பு கல்வியாண்டு தொடங்கி 6 மாதங்கள் நிறைவடைய உள்ள நிலையில் இன்னும் பள்ளிகள் திறக்கப்படவில்லை. மேலும் அரையாண்டு தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டதால் அரசுப்பள்ளி மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு தயாராவதில் சிக்கல் நிலவுகிறது. ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சி வாயிலாக வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது
இதற்கிடையில் நடப்பு கல்வியாண்டில் பொதுத்தேர்வு கண்டிப்பாக நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறி உள்ளார். மேலும் அதற்கான தேதிகள் சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு பின்னர் வெளியாகும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கேரளா, கர்நாடகா, புதுச்சேரி, அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் ஜனவரி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கு உட்பட்டு மாணவர்கள் வகுப்புகளுக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனால் தமிழகத்திலும் விரைந்து பள்ளிகளை திறந்தால் தான் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு தயாராக முடியும் என்ற நிலை உள்ளது. இன்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இது குறித்து பேசுகையில், தமிழகத்தில் எப்போது பள்ளிகளை திறக்கலாம் என்பது குறித்து இன்று முதல் கருத்து கேட்கப்படும் என தெரிவித்துள்ளார்.
பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடம் இந்த மாத இறுதி வரை கருத்து கேட்கப்பட்டு அதன்படி முடிவெடுக்கப்படும் என அமைச்சர் கூறி உள்ளார். ஏற்கனவே நடந்த கருத்துக்கேட்பு கூட்டத்தில் பொங்கல் பண்டிகைக்கு பின்னர் பள்ளிகளை திறக்கலாம் என பெற்றோர்கள் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.