தங்கம் செய்யாததை சங்கம் செய்யும்
தங்கம் செய்யாததைசங்கம் செய்யும்
யார் இந்த இயக்கவாதிகள்????
அவர்கள் அந்நியர் அல்ல!!
நம்மில் ஒருவர்
எந்த சங்கமாக இருந்தாலும் அச்சங்க நிர்வாகிகள் பெரும்பான்மையினர் போற்றுதலுக்கும் மரியாதைக்கும் உரியவர்கள்.
தங்களின் பணியோடு பிற சக ஊழியரின் நலன்களுக்காக தனது நேரத்தையும்,உழைப்பையும் செலவிடுபவர்கள்.. அதிலும் சிலர் குடும்பத்தைக்கூட கவனிக்காமல் சங்கத்துக்காக விடிய விடிய பயணங்களிலும், தபால் அனுப்புவது, போராட்டத்திற்கும், கூட்டங்களுக்கும் ஒருங்கிணைப்பது என கடும் பணியில் உணவைக்கூட மறந்து மூழ்கிப் போவார்கள்.
ஆனால் அவர்களின் அருமை, முக்கியத்துவம் நம்மில் சிலருக்கு தெரியாது.....
ஊழியர்கள் முழுநேர சங்க ஊழியர்களாகவும்,அலுவலர்கள், அதிகாரிகள், தொழிலாளர்கள் என பகுதிநேர ஊழியர்களாகவும் அனைத்து பகுதியிலும் இருக்கின்றார்கள்.
குறிப்பாக அவர்கள் அலுவலகம் மற்றும் பணி புரியும் இடத்திற்கே சென்று உறுப்பினர் சந்தா மற்றும் நன்கொடைகள் கேட்போம்.... சங்க வித்தியாசம் இல்லாமல் புதியதாக உறுப்பினராக சேர வலியுறுத்துவோம். எதிராக வரும் கருத்துக்களையும், கேள்விக் கணைகளையும் கூர்மையாக, சகிப்பு தன்மையோடு உள்வாங்கிக் கொள்வோம். போட்டியாளர்களின் நடவடிக்கைகள் பற்றி ஆரோக்யமாக, பொறுமையோடு விமர்சனம் செய்வோம். தனிநபர் விமர்சனம் தவிர்த்து கொள்கை அடிப்படையை ஆணித்தரமாக பேசுவோம். வெகு சிலர் அங்கே பேயறைந்தது போல் வேண்டா வெறுப்பாக உட்கார்ந்து கேட்பது போல் பாவனை செய்வார்கள்...
சிலர் பணம் மொய் எழுத வந்திட்டான்கள், இவனுகளுக்கு வேற வேல இல்ல என்று (வாரி வாரி வழங்கியது போல) ரொம்பவும் சலித்து கொள்வார்கள்....
சிலர் பார்த்ததும் ஓடி எங்கோ ஒளிந்து கொள்வார்கள்.
மிக முக்கியமாக தான் மிக பிசியாக இருப்பது போல பாவனை செய்வார்கள்.
பலர் சம்பந்தமில்லாத கேள்விகளை கேட்டு காசு கொடுப்பதில் இருந்து தவிர்க்க அனைவருக்கு முன்பும் கேவலப்படுத்துவார்கள். மதிய உணவு இடைவேளையில் சந்திக்க சென்றால் சிறிய டப்பா உணவை கூட ஒரு மணிநேரத்திற்கு மேலாக மெதுவாக நன்கு மென்று சுவைத்து ரசித்து, நாம் அந்த இடத்தை விட்டு நகரும் வரை உண்பார்கள். இன்னும் சிலர் சங்கத்துக்காரர்கள் தங்களின் மிக சிறிய சொந்த பிரச்சனையை கூட பெரிய பிரச்சனையாக கருதவில்லை என்பார்கள்.
மகளிரில் சிலர் தங்களின் கணவனின் மேல் பழியைப் போட்டு எதற்கெடுத்தாலும் வீட்டில் கேட்டு பேசி விட்டு பிறகு சங்கத்தில் இணைவதாகவும், நன்கொடை தருவதாகவும் சமாளிப்பார்கள்.
இது போல சக பணியாளர்களின், தொழிலாளர்களின் மனநிலையை,உளவியலைக் கற்று, அனுபவமும் பயிற்சியும் பெற எனக்கு தொழிற்சங்கம் வாய்ப்பளித்ததை பெரிய பலமாகவும் வரமாகவும் கருதுகிறேன்.
ஆம் 50 ஆயிரத்திற்கு மேல் மாத சம்பளமோ, அல்லது கை நிறைய பென்சன் வாங்கும் அலுவலர்கள், தேவையான ஊதியம் பெறும் தொழிலாளர்கள் நாங்கள் உங்களை
தேடி பணம் பெறவேண்டிய அவசியம் என்ன?
எங்களுக்கு அதிலென்ன ஆதாயம்?
பதில் இருக்கிறது.
எப்போதும் தன்னுடைய பங்களிப்பு இல்லாமல் ஒரு நிகழ்வு நடந்தால் அதில் ஆர்வமோ, அக்கறையோ, ஈடுபாடோ, இருக்காது. இது அடிப்படை மானிட உளவியல் கருத்து.
தான் கொடுக்கும் சிறு தொகை பெரிய கவனத்தை ஈர்த்திட செய்யும்.
அனைவரையும் ஒருங்கிணைத்து பொது எதிரிக்கு எதிராக போராட்டத்தை நடத்துவது இயற்கையின் கொள்கை.
பாருங்கள்! வனங்களில் காட்டெருமைகள் ஒன்றாக சேரும் போது சிங்கம் தோற்றோடும்.
அரசு மற்றும் நிர்வாகத்தின் அதிகாரம் அனைத்து பகுதி பணியாளர்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிரான ஆயுதம்.
மிக எளிதாக 8A அல்லது 8B போன்ற நடவடிக்கை மூலம் சில அதிகாரிகளையும்,
சிறிய சிறிய தவறுகளுக்கு கூட திருத்துவது, எச்சரிப்பது என்று இல்லாமல் குற்றசாட்டு குறிப்பாணைகள் கொடுத்து பழி வாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுத்தி தனி நபரை முடக்கி விடலாம்.
அரசு முறைசாரா தொழிலாளிக்கு சமூக பாதுகாப்பை மறுக்கலாம்.
ஊழியர் ஒற்றுமையை குலைப்பது என்பது ஒரு வகை அரசியல்
அரசியல் ஒற்றுமையில்லாத கூட்டம் உயர் அதிகாரியின் சர்வாதிகாரத்தால் சிதறடிக்கப்படும். பல சர்வாதிகாரிகள் உருவாகிவிடுவர்.இதற்காகத் தான் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்க ஊழியர்கள், தொழிலாளர்கள், உரிமைகளை வென்றெடுக்க சங்கங்கள் தோற்றுவிக்கப்பட்டன.
அல்லாமல் ரூபாய்/200 அல்லது 250 உறுப்பினர் சந்தா பெறுவதற்காகவோ, நன்கொடைகள் பெறுவதற்காகவோ அல்ல!! ரூபாய்.100/200/300 கொடுத்து மாதமாதம் பல நாளிதழ்கள் வாங்குபவர்கள், 100 ரூபாய் கொடுத்து சங்க இதழுக்கு சந்தாதாரர் ஆக வெகுவாக யோசிப்பார்கள்.காரணம், எதை பற்றியும் கவலை படாமல் வசதி வாய்ப்புடன் வாழ்கின்ற நுகர்வுக் கலாச்சாரமே!
எங்கேயாவது ஸ்பான்சர் பெற்று சங்கம் நடத்திவிடலாம். ஆனால் யாருக்காக நடத்துகிறோம் என்கிற போது உணர்வுகள் வற்றிப்போகும்.
ஊழியர், தொழிலாளர் ஆதரவு மற்றும் ஈடுபாடு இல்லாவிட்டால் சங்கங்கள் வருங்காலத்தில் கண்டிப்பாக அழிவை நோக்கி செல்லநேரிடும்.
பின்பு நாமேது......???
தொழிற்சங்க நிர்வாகிகள், ஊழியர்கள், எந்த சங்கமாக இருந்தாலும் 'பிச்சைக்காரர்கள் அல்ல' 'கேவலமானவர்கள் அல்ல' உங்களால் அவர் வாழ்க்கை நடத்துபவர் அல்ல? என்பதை உணருங்கள்!!
முதலில் சங்கத்திற்கு உறுப்பினர் சந்தாவை கொடுங்கள்!!!
பின்னர் உங்களின் பிரச்சனைகளை பொறுமையாக எடுத்து கூறுங்கள்!!!
மனம் திறந்து அன்புடன் பேசுங்கள்!!!
தீர்வுக்காண வழிகளை இணைந்து கண்டுபிடியுங்கள்!!! இயக்கங்களில் பங்கேற்க நேரம் ஒதுக்குங்கள்!!! உற்சாக மனநிலை என்பது பணத்தால் வராது. ஆனால் உங்கள் ஆதரவு என்பதால் வரும்.
இன்று நீங்கள் இந்த நல்ல நிலையை அடைய நிச்சயமாக சங்கம் ஏதோ ஒரு வழியில் உங்களோடு இரண்டற கலந்திருக்கும். நீங்கள் இன்று பெற்றுள்ள அனைத்தும் சங்கம் என்ற ஒற்றை சொல்லின், நமது முன்னோர்களின் எண்ணற்ற தியாக தழும்புகளே! மறந்திடவோ, மறைத்திடவோ முடியாது.
முடிந்தால் ஓரே ஓரு ஆண்டுமட்டும் சங்கநிர்வாகியாக இருந்து பணியாளர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டிட களத்தில் இறங்கி பாருங்கள்.பிறகு எப்போதும் நீங்கள் கேவலமாக/ஏளனமாக பேசிட மாட்டீர்கள்.
இந்த நீண்ட பதிவை
கொள்கை ரீதியாக பணியாற்றும், சேவையாற்றும், நல்சங்க போராளித் தோழர்களுக கனிவோடு மலர் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்.
தங்கம் செய்யாததை சங்கம் செய்யும்....