சுயநிதி மருத்துவ கல்லூரி கட்டணத்துக்கு பயந்து சேர்க்கை ஆணை பெறாமல் சென்ற 3 அரசு பள்ளி மாணவிகள் மீண்டும் அழைத்து மருத்துவக்கல்வி இயக்ககம் வழங்கியது
சுயநிதி மருத்துவக்கல்லூரி கட்டணத்துக்கு பயந்து மாணவர் சேர்க்கை ஆணையை பெறாமல் சென்ற 3 மாணவிகளை மருத்துவக்கல்வி இயக்ககம் மீண்டும் அழைத்து வழங்கி இருக்கிறது.
மருத்துவப்படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு மூலம் இடங்கள் கிடைக்க தமிழக அரசு சார்பில் சட்டங்கள் இயற்றப்பட்டு, இந்த ஆண்டே நடைமுறைப்படுத்தப்பட்டது.
அதன்படி, அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகளில் உள்ள 313 எம்.பி.பி.எஸ். அரசு ஒதுக்கீட்டு இடங்களும், 92 பி.டி.எஸ். அரசு ஒதுக்கீட்டு இடங்களும் என மொத்தம் 405 இடங்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கு கிடைத்தன.
அவர்களுக்கான கலந்தாய்வு கடந்த 18-ந்தேதி தொடங்கி, 20-ந்தேதியுடன் முடிவடைந்தது. மொத்தம் இருந்த 405 இடங்களில் (6 பி.டி.எஸ். இடங்கள் போக) 399 இடங்கள் நிரம்பின. இந்த நிலையில் அரசு மருத்துவக்கல்லூரிகளில் எந்தவித தயக்கமும் இன்றி அரசு பள்ளி மாணவர்கள் இடங்களை தேர்வு செய்தனர். ஆனால் சுயநிதி கல்லூரிகளில் இருந்த அரசு ஒதுக்கீட்டு இடங்களை கட்டணம் அதிகமாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டு தயக்கம் காட்டினர். அந்த வகையில் சில மாணவ-மாணவிகள் மாணவர் சேர்க்கையை உறுதி செய்துவிட்டு அதற்கான ஆணையை பெறாமலும் சென்றுவிட்டனர்.
இதன் தொடர்ச்சியாக, தமிழக அரசும் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு மூலம் இடங்களை தேர்வு செய்த அரசு பள்ளி மாணவர்களுக்கான கல்வி மற்றும் விடுதி கட்டணங்களை அரசே செலுத்தும் என்று சொல்லியது.
=இதையடுத்து சுயநிதி கல்லூரிகளில் இடங்களை தேர்வு செய்து கட்டணம் அதிகமாக இருக்கும், அதை செலுத்த முடியாது என்ற காரணத்தினால் பயந்து மாணவர் சேர்க்கை ஆணையை பெறாமல் சென்ற திவ்யா, கவுசிகா, தாரணி ஆகிய 3 மாணவிகளை மருத்துவக்கல்வி இயக்ககம் மீண்டும் அழைத்து நீங்கள் எந்த கட்டணமும் செலுத்தாமல் கல்லூரிகளில் சேரலாம் என்று கூறி மாணவர் சேர்க்கை ஆணையை நேற்று வழங்கினர்.
ஆணையை பெற்றுக்கொண்ட மாணவி கவுசிகா கூறுகையில், ‘கட்டணம் செலுத்த பணத்துக்கு என்ன செய்வது? என்று தெரியாமல் சேர்க்கை ஆணையை பெறாமல் சென்றுவிட்டோம். பின்னர் மருத்துவக்கல்வி இயக்ககம் எங்களை அழைத்து ஆணையை வழங்கி இருக்கிறது. எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது’ என்றார்.
மருத்துவக்கல்வி இயக்குனர் டாக்டர் கே.நாராயணபுபா அந்த 3 மாணவிகளுக்கு மாணவர் சேர்க்கை ஆணையை வழங்கி, ‘கல்லூரிகளில் உங்களுக்கு கல்வி கட்டணம், விடுதி கட்டணம் அனைத்தையும் அரசே செலுத்திவிடும். ஒரு ரூபாய் கூட செலவு செய்ய தேவையில்லை. ஆகவே தைரியமாக கல்லூரிக்கு செல்லுங்கள் என்று அறிவுரை வழங்கினார்.
அப்படி எதுவும் தகவல் தேவைப்பட்டால், என்னையோ அல்லது மருத்துவ மாணவர் சேர்க்கை செயலாளரையோ உடனே அணுகுங்கள்’ என்றார்.