மாணவர்கள் சேர்க்கை விவரங்களை தினமும் அளிக்க உத்தரவு. 

மாணவர்கள் சேர்க்கை விவரங்களை தினமும் அளிக்க உத்தரவு. 



தமிழகத்தில் கொரோனாவின் தாக்கத்தால் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. கொரோனா தொற்று குறைந்த பின்னர்தான் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று இன்னும் முறையான அறிவிப்பு வரவில்லை. ஆனால் 10 ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே வழங்கப்பட்டது. அதேபோல் 7 மற்றும் 9 ம் வகுப்பு மாணவர்களுக்கும் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளது. 


இதற்கிடையே கல்வித் தொலைக்காட்சி மூலம் மாணவர்களுக்கு பாடங்கள் கற்பிக்கும் பணி தொடங்கி உள்ளது. வகுப்பு வாரியாகவும் , பாடப்பிரிவு வாரியாகவும் இந்த வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசுப் பள்ளிகளில் 1 , 6 , 9 ம் வகுப்புகளுக்கு ஆகஸ்ட் 17 ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. அதற்கான ஏற்பாடுகளை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது : 


தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 1 , 6 , 9 ம் வகுப்புகளுக்கு ஆகஸ்ட் 17 ம் தேதி ( இன்று ) முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும். அதேபோல் ஒரு பள்ளியில் இருந்து மற்றொரு பள்ளிக்கு மாறும் 2 முதல் 10 ம் வகுப்பு மாணவர்களும் இன்று முதல் விண்ணப்பிக்கலாம். மாணவர் சேர்க்கை நடைபெறும் நாளிலேயே இலவச நோட்டுகளும் வழங்கப்படும். அதேபோல பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கு வரும் 24 ம் தேதி முதல் பணவர் சேர்க்கை தொடங்க உள்ளது. மேலும் அனைத்து தொடக்க , நடுநிலை , உயர்நிலை , மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் இன்று முதல் மேற்கொள்ளப்படும் மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை தினமும் இதற்காக வழங்கப்பட்ட படிவத்தில் உள்ளீடு செய்து தகவல் அளிக்க வேண்டும். தங்களது கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் மாணவர் விவரத்தை வட்டாரக்கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.