ஆா்.டி.இ. சட்டப்படி தனியாா் பள்ளிகளில் 25% மாணவா் சோ்க்கைக்கான மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனாின் அறிவுரைகள்.....
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்ட மாநில முதன்மைத் தொடர்பு அலுவலர் மற்றும் தமிழ்நாடு மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநரின் செயல்முறைகள்,
பொருள் : குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச் சட்டம் - 2020-2021 ஆம் கல்வியாண்டில் அனைத்துச் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் 25% இட ஒதுக்கீடு வழங்குதல் - சேர்க்கை நடைமுறைகள் பள்ளிகளுக்கு அறிவுரை வழங்குதல் - சார்பாக.
14.08.2020) குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் , 2009 பிரிவு 12(1) (c) இன்படி அனைத்துச் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு நுழைவுநிலை வகுப்புகளில் குறைந்த பட்சம் 25% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.
இதனை நடைமுறைப்படுத்துவதற்கு பார்வை-2 மற்றும் 3இல் உள்ள அரசாணைகளில் விரிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன. அவ்வழிகாட்டுதல்களைப் பின்பற்றி 2013-2014 முதல் 2019-2010 ஆம் கல்வியாண்டு வரை மாணாக்கர் சேர்க்கை செய்யப்பட்டு பயனடைந்துள்ளனர். சட்டத்தின் நோக்கம் முழுமையாக நிறைவேறும் வண்ணமும், வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் அதிக அளவில் பயன் பெறும் வண்ணமும், வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யும் பொருட்டும் பார்வை-4இல் உள்ள அரசாணையில் கூடுதல் வழிகாட்டுதலும், திருத்திய கால அட்டவணையும் வழங்கப்பட்டுள்ளது.
கொரானா தீநுண்மி பரவல் காரணமாக 2020-2021ஆம் ஆண்டிற்கான சேர்க்கை நடைமுறைகள் பார்வை-5இல் உள்ள அரசுக் கடிதத்தின்படி ஒத்திவைக்கப்பட்டு, அதுவிவரம் பார்வை-6இல் உள்ள இவ்வியக்ககச் செயல்முறைகள் மூலம் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது.
தற்போது, பார்வை-7இல் உள்ள அரசாணையின்படி 2020-2021ஆம் கல்வியாண்டில் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் , 2009 பிரிவு 12(1) (c) இன்படி சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்டு, அதன்பொருட்டு சேர்க்கையின் போது பின்பற்ற வேண்டிய நிலையான செயல்பாட்டு வழிமுறைகள் (Standard Operating Procedure) வெளியிடப்பட்டுள்ளது.
மேற்படி அரசாணையினைத் தொடர்ந்து, பார்வை- 8இல் உள்ள அரசுக் கடிதத்தில் 2020-2021ஆம் கல்வியாண்டில் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் , 2009 பிரிவு 12(1) (c) இன்படி சேர்க்கைக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
பார்வையில் கண்ட அரசாணைகள் மற்றும் அரசுக் கடிதங்களின்படி 2020-2021 ஆம் கல்வியாண்டில் 25% இட ஒதுக்கீட்டின்கீழ் சேர்க்கை நடைமுறைகள் சார்ந்து கீழ்க்குறிப்பிட்டுள்ள அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.
1. சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் தொடக்கநிலை வகுப்புகளில் (எல்கே.ஜி அல்லது 1ஆம் வகுப்பு) பள்ளி வாரியாக உள்ள மொத்த இடங்கள் மற்றும் 25 விழுக்காடு இடங்கள் ஆகிய விவரங்களை இணையதளம், உள்ளூர் செய்தித்தாள்கள், CEO, DEO, SSA, BEO அலுவலக தகவல் பலகைகள், சம்பந்தப்பட்ட பள்ளி தகவல் பலகைகள் ஆகியவற்றில் அறிவிப்பு செய்ய வேண்டும்.
2. சட்டப்பிரிவு 12 (1) (சி) இன் கீழ் சேர்க்கை வழங்க, தமிழ்நாடு குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமை விதிகள், 2011, விதி எண் 4(1)இன்படி எல்.கே.ஜி அல்லது முதல் வகுப்பிற்கு அருகாமையிடம் என்பது 1 கிலோ மீட்டர் ஆகும்.
3. சட்டப்பிரிவு 12 (1) (சி) இன் கீழ் சேர்க்கை கோரும் குழந்தைகளின் பெற்றோர் பள்ளிக் கல்வித் துறையின் இணையதளத்தில், இணைய வழியாக விண்ண ப்பிக்கலாம். இணையதள முகவரி emis.tnschools.gov.in.
4. பெற்றோர்கள் இணைய வழியாக எங்கிருந்து வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். மேலும், முதன்மைக் கல்வி அலுவலர் / மாவட்டக் கல்வி அலுவலர் / வட்டாரக் கல்வி அலுவலர் / அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வள மைய அலுவலகங்களில், சட்டப்பிரிவு 12 (1) (சி) இன் கீழ் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை இணைய வழியில் விண்ணப்பிக்கத் தக்க ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.)
5. அந்தந்த பள்ளிகளில் விண்ணப்பங்கள் ஏதேனும் பெறப்பட்டால், சார்ந்த பெற்றோர்களுக்கு ஒப்புகைச் சீட்டு (அ.ஆ. (நிலை) எண். 60 பள்ளிக் கல்வித் துறை நாள் 01.04.2013இல் உள்ள ஒப்புகைச் சீட்டில்) உடன் தவறாது வழங்கப்படவேண்டும் இவ் விண்ணப்பங்களைப் பள்ளியிலேயே இணைய வழியில் பதிவேற்றம் செய்யலாம் அல்லது அருகிலுள்ள வட்டார வள மையங்கள் / வட்டாரக் கல்வி அலுவலர் மாவட்டக் கல்வி அலுவலர்/ முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் கொடுத்து இணைய வழியில் பதிவேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
6. ஒவ்வொரு தனியார் சுயநிதிப் பள்ளிகளிலும், தகவல் பலகையில் அந்த பள்ளிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள இடங்ளைக் குறிப்பிட்டு 17.08.2020 அன்று 12 (1) (சி) இன் கீழ் 25% சேர்க்கைக்கான விண்ணப்பங்களை விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிட வேண்டும்.
7. 27.08.2020 முதல் 25.09.2020 வரை இணைய வழியாக விண்ண ப்பிக்கலாம்.
8. இதன்பொருட்டு மேற்குறிப்பிட்டுள்ள அனைத்து அலுவலகங்களிலும், விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்யத் தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட வேண்டும். மேற்குறிப்பிட்டுள்ள 27.08.2020 முதல் 25.09.2020 வரை மேற்படி பத்தி 4இல் குறிப்பிட்டுள்ள அனைத்து அலுவலகங்களிலும் இணைய வசதி, கணினி, சான்றுகளை பதிவேற்றம் செய்யத் தேவையான Scanner வசதி, கணினி இயக்குபவர் ஆகியவற்றை 26.08.2020 அன்றே தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். இதனை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும்.
9. குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009ஐ நடைமுறைப்படுத்துதல் சார்ந்து அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மாவட்டத் தொடர்பு அலுவலர் என்பதால், மேற்படி அனைத்து பணிகளையும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஒருங்கிணைத்துச் செய்து முடிக்கக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
10. மாணவர்கள் சேர்க்கை பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே சென்றடையும் வகையில் அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளிலும் பள்ளியின் பிரதான நுழைவு வாயிலில் ( Main Gate) பொதுமக்களுக்கு நன்கு தெரியும் வகையில் பள்ளிப் பெயர் பலகைக்கு அருகிலும், பொதுமக்கள் பெருமளவில் கூடும் இடங்களிலும் 6"x10” அடி அளவில் கடந்த ஆண்டுகளில் வைக்கப்பட்டதுபோல் அனைத்து விவரங்களையும் உள்ளடக்கிய அறிவிப்புப் பலகை (flex Board) வைக்கப்படல் வேண்டும்.
11. பார்வை-7இல் உள்ள அரசாணை இணைப்பு-2 பத்தி- 1 முதல்4 வரை (Annexure-II - Paragraph 1 to IV) குறிப்பிட்டுள்ள நிலையான செயல்பாட்டு வழிமுறைகளை (Standard Operating Procedure) பின்பற்றி சேர்க்கைக்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.
12. பார்வை-8இல் உள்ள அரசுக் கடித நகல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ள அட்டவணையின்படி 2020-2021ஆம் ஆண்டிற்கான 25% இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு, வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் பயனடையும் வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கம் தெரிவிக்கலாகிறது.
என்று குறிப்பிடப்பட்டுள்ளது.