நடப்பாண்டு அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க வாய்ப்பு .....?...!

நடப்பாண்டு அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க வாய்ப்பு .....?...!


பள்ளிகளை எப்போது திறக்கலாம் என பெற்றோர்களிடம் கருத்து கேட்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.


* பள்ளிகளை திறந்தாலும், சில மாதங்களுக்கு சுழற்சி அடிப்படையில், வாரத்தின் 3 நாட்கள் மட்டும் பள்ளி வேலை நாட்களாக அறிவிக்கப்படலாம்.


* பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்து மாணவர்களுக்கும் இலவசமாக மாஸ்க், கிருமிநாசினி பாட்டில்கள் வழங்கப்படவுள்ளது.


 தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் குறைந்து பள்ளிகள் திறக்கப்பட்டாலும், நடப்பாண்டு புதிய மாணவர் சேர்க்கை 30 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளதாக கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


கொரோனாவின் கோர தாண்டவத்தால் தமிழகத்தில் நடப்பாண்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, 1 முதல் 9ம் வகுப்பு வரை ஆண்டு இறுதி தேர்வுகளும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. கொரோனாவின் தாக்கம் குறையாததால், நடப்பு கல்வியாண்டிற்கு பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது இதுவரை,உறுதி செய்யப்படாத நிலை உள்ளது. அதேசமயம், தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகளை எடுத்து வருகின்றன.


இதேபோல், அரசுப்பள்ளிகளில் படித்து வரும் பிளஸ் 2  மாணவர்களுக்கு வீடியோ பாடம் பதிவேற்றம் செய்தும், பாடபுத்தகங்களை வழங்கியும் வீட்டிலிருந்தே படிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


இதுஒருபுறம் இருக்க, புதிய மாணவர் சேர்க்கை, கல்வி கட்டணம் வசூலில் தனியார் பள்ளிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் அடுத்த ஓரிரு மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டாலும், கொரோனா அச்சம் காரணமாக புதிய மாணவர் சேர்க்கை 30 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளதாக கல்வியாளர்களும், ஆசிரியர்களும் தெரிவித்துள்ளனர்.


இதுகுறித்து கல்வியாளர்கள் கூறியதாவது:


தமிழகத்தில் கொரோனா முற்றிலுமாக கட்டுப் படுத்தப்பட்டாலும், அதன் மூலம் ஏற்பட்டுள்ள தாக்கம் அடுத்த ஓரிரு ஆண்டுகளுக்கு நீடிக்கும். இதற்கு கல்வித்துறையும் விதிவிலக்கு அல்ல.
புதிய மாணவர் சேர்க்கை, கல்வி கட்டணம் செலுத்துதல், பள்ளிக்கு சென்று வருதல், கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகள், தேர்வுகளை நடத்துதல், அதன் முடிவுகளை வெளியிடுதல் என அனைத்து படிநிலைகளிலுமே கொரோனாவின் தாக்கம் எதிரொலிக்கும். 


குறிப்பாக, நடப்பாண்டிற்கான புதிய மாணவர் சேர்க்கை பல மடங்கு குறையும். அதாவது, தற்போதுள்ள நிலையில் செப்டம்பர் மாதம் அல்லது அதற்கு பிறகுதான் பள்ளிகளை திறக்க வாய்ப்புள்ளது. அப்போது, நடப்பு கல்வியாண்டின் முதல் பருவம் முற்றிலும் முடிந்துவிடும். அதற்கு பிறகு ஓரிரு மாதத்தில் ஆண்டு இறுதித்தேர்வை சந்திக்கும் நிலை ஏற்படும். 


இதன் காரணமாக, பல பெற்றோர்கள் ஆண்டு முழுவதற்குமான கட்டணத்தையும் எவ்வாறு செலுத்துவது என்ற தயக்கத்தில் உள்ளனர். குறிப்பாக, தனியார் பள்ளிகளில் எல்கேஜி, யூகேஜி மற்றும் ஒன்றாம் வகுப்புகளில் சேர்க்க 5 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை கட்டணமாக செலுத்த வேண்டும்.
காலம் கடந்து பள்ளிக்கு செல்லும் போது, முழு கட்டணத்தையும் செலுத்த வேண்டுமா என நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த பெற்றோர்கள் யோசிக்கத் தொடங்கியுள்ளனர்.


அதேசமயம், கல்விக்கட்டணம் குறித்த யோசனை ஒருபுறம் இருந்தாலும், கொரோனாவின் அச்சமும் பெற்றோரின் தயக்கத்திற்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது. 


கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும், அதனால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதில் குழந்தைகளும், வயதானவர்களும் அதிகளவில் உயிரிழப்பதால் பெற்றோருக்கு கொரோனா குறித்த அச்சம் இன்னும் நீங்கவில்லை. 


இதன்காரணமாக, குழந்தைகளை வெளியே அனுப்ப தயங்கி வரும் நிலையில், நடப்பாண்டு பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்ற முடிவிலும் உள்ளனர்.


அரசுப்பள்ளிகளில் அதிகரிக்க வாய்ப்பு


தனியார் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர் தயக்கம் காட்டுவதற்கு அங்கு வசூலிக்கப்படும் அதிகப்படியான கல்வி கட்டணம்தான் முக்கிய காரணமாக உள்ளது. ஆனால், அரசுப்பள்ளிக்கு அதுபோன்ற கட்டணம் எதுவும் இல்லை என்பதால், அங்கு மாணவர் சேர்க்கை குறைவதற்கான வாய்ப்புகள் இல்லை என ஆசிரியர்கள் கருதுகின்றனர். அதேவேளையில், தனியார் பள்ளியை தவிர்க்கும் பலர், அரசுப்பள்ளிக்கு படையெடுக்க கூடும் என்பதால், அங்கு மாணவர் சேர்க்கை அதிகரிக்கவே வாய்ப்புள்ளது. 


இது ஒரு புறம் என்றாலும் இந்த கொரோனா காலத்தில் அரசுப்பள்ளி ஆசிாியா்கள் நடந்துக்கொண்ட விதம் பத்தாம் வகுப்பு தோ்வு நடத்துவது, பள்ளிகளை திறப்பது குறித்த விஷயங்களில். கொரோனாவை வைத்து இவா்கள் செய்த அரசியல். மாணவா்களின் கல்வி நலனில் அரசு எடுத்த எல்லா முயற்சிகளுக்கும் இவா்கள் வைத்த முற்றுப்புள்ளி பனிரெண்டாம் வகுப்பில் அரசுப் பள்ளிகளின் தோ்ச்சி விகிதம். பத்தாம் வகுப்பு மாணவா்களை தோ்வுஎழுத விடாமல் செய்து அவா்களை தற்குறிகளாக்கி மேல் வகுப்பிற்கு செல்லவிடாமல் செய்துள்ளதால் இந்த ஆண்டு பிளஸ் 1 சோ்க்கை விகிதம் அதிகமாகவே குறையும். இடைநிற்றல் அதிகாிக்கும் ஆகியவை அனைத்து தரப்பு பெற்றோா்களையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.


இந்த கொரோனா கால விடுமுறை என்பது பள்ளிகளின் அவசியத்தை பெற்றோா்களுக்கு அதிகமாகவே உணா்த்தியுள்ளது. பாடம் படிப்பது மட்டும் கல்வியல்ல, நல்ல பண்பு, சீறிய ஒழுக்கம், சிறந்த கட்டுப்பாடு ஆகியவை அதிமுக்கியம் என்று உணா்ந்துள்ளனா். அதுவும் அது தனியாா் பள்ளிகளில் தான் தரமாக கிடைக்கும் என்பதில் நல்லதோா் தெளிவை பெற்றுள்ளனா். எனவே யாரோ சிலா் சொல்வதை வைத்துக்கொண்டு அரசு பள்ளிகளில் மாணவா் சோ்க்கை கூடும் தனியாா் பள்ளிகளில் குறைந்து விடும் என்று சொல்வதெல்லாம் கட்டுக்கதை. 


பொருளாதார சூழ்நிலையால் இந்த வருடம் அரசுப்பள்ளியில் படிக்க வைத்துவிட்டு, அடுத்த ஆண்டு தனியார் பள்ளியில் சேர்த்துக்கொள்ளலாம் எனவும் சில பெற்றோர்கள் முடிவெடுத்து உள்ளனா் என்பதும் சாத்தியப்படாத விஷயம். 


ஒரு மாணவன் தனியாா் பள்ளியை விட்டு அரசுப் பள்ளிக்கு சென்றுவிட்டால் அந்த ஆண்டவனே வந்து வேண்டி வேண்டி கூப்பிட்டாலும் அவன் மீண்டும் இந்த பக்கம் வந்து தலை வைத்து கூட படுக்க மாட்டான். ஏன் என்றால் அங்கு சென்று கட்டுப்பாடுகளற்ற உலகத்தில் கலந்து பெற்றோா்களையும். ஆசிாியா்களையும் ஏமாற்றக் கற்றுக்கொண்டவா்கள் நல்ல கல்வியை நாடி வரமாட்டாா்கள். இதை நான் பல அனுபவங்களில் பாா்த்திருக்கிறேன்.


நல்ல கல்வி வேண்டும் என்று நினைக்கிற பெற்றோா்கள் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அந்த தவறை செய்ய மாட்டாா்கள். கொரோனா காலத்தை காட்டி கட்டுகிற கட்டணத்தில் சலுகை கேட்பாா்களே தவிர நல்ல கல்வியை நிறுத்த மாட்டாா்கள்.


எனவே பள்ளி நிா்வாகிகளே எதற்கும் கவலைப்படாதீா்கள், இந்த பயமுறுத்தல்களுக்கு எல்லாம் பயப்படாதீா்கள். இதை வைத்தாவது அரசுப்பள்ளி மாணவா்களின் எண்ணிக்கையை உயா்த்தலாம் தங்களின் உத்தியோகத்தை காப்பாற்றிக்கொள்ளலாம் என்று சிலா் நினைக்கிறாா்கள்.


நீங்கள் உங்கள் முயற்சியை கைவிடாதீா்கள். சூழ்நிலைக்கு ஏற்றவாறு கட்டணங்களை வாங்கிக்கொள்ளங்கள் தரமான கல்வியை உறுதி செய்யுங்கள். இந்த ஆண்டு நாம் உயிா் வாழ்வதற்கான ஆண்டு. வருமானத்தை அப்புறும் பாா்த்துக்கொள்ளலாம்.