செப்டம்பர் 5-ம் தேதி பள்ளிகள் திறப்பு; மாணவர் சேர்க்கை தொடங்கியது
ஆந்திர மாநிலத்தில் செப்டம்பர் 5-ம் தேதி பள்ளிகளைத் திறக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதையடுத்த மாணவர் சேர்க்கை தொடங்கி அடுத்த 40 நாள்களுக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்றுப் பரவல் காரணமாக, பள்ளிகளுக்கு, மாணவர்களின் பெற்றோர் மட்டுமே வந்து சேர்க்கை நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளை, ஆன்லைன் வகுப்பை மேற்கொள்ள வசதி இருக்கும் மாணவர்கள், வீட்டில் தொலைக்காட்சி, ரேடியோ வசதி இருக்கும் மாணவர்கள், எந்த வசதியும் இல்லாத மாணவர்கள் என்று மூன்று பிரிவுகளாக வகைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதே சமயம், வேறு பள்ளிகளில் சேர்க்கை பெற விரும்பும் பெற்றோருக்கு மாற்றுச்சான்றிதழ் வழங்கவும், ஒரு (அடையாளச் சான்று மட்டும்) பள்ளியில் சேர்க்கை பெற விரும்பும் மாணவர்களிடம் எந்த சான்றிதழும் கோராமல் சேர்க்கை வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் பள்ளி மற்றும் ஆசிரியர்களுக்கும் பல்வேறு அறிவுறுத்தல்களும், வழிகாட்டு நெறிமுறைகளும் அளிக்கப்பட்டுள்ளது.