ஆன்லைன் வகுப்புகளுக்கு செல்போன் வாங்கித் தராததால் 10-ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள சிறுதொண்டமாதேவி கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மகன் விக்னேஷ் வயது 14. இவர் கொள்ளுக்காரன் குட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
ஊரடங்கு காலத்தில் தந்தையிடம் அடிக்கடி தொலைபேசி வாங்கி கொடுங்கள் என்று கேட்டு வந்துள்ளார். உனக்கு எதற்கு தொலைபேசி என அதனை கண்டித்து மறுத்து வந்துள்ளார்.
ஊரடங்கு காலத்தில் அந்த பள்ளியில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. எனவே ஆன்லைனில் படிப்பதற்கு வசதியாக செல்போன் வாங்கித் தருமாறு விக்னேஷ் தனது தந்தையிடம் கேட்டார். அதற்கு விஜயகுமார் தற்போது தன்னிடம் பணம் இல்லை என்றும் முந்திரி கொட்டைகளை விற்று செல்போன் வாங்கி தருவதாக கூறியுள்ளார்.
இதனால் மனமுடைந்த விக்னேஷ் வீட்டில் தனது தாயாரின் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த காடம்புலியூர் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, இலவச கவுன்சிலிங்கிற்கு கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.
மாநில உதவிமையம்: 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050