தனியார் பள்ளிகளின் கல்வி கட்டண நிர்ணயக்குழுவை கலைத்துவிடுங்கள் தமிழக அரசுக்கு மாநில பொதுச் செயலாளர் கே.ஆர்.நந்தகுமார் வேண்டுகோள்....
அனுப்புதல்...
கே. ஆர். நந்தகுமார். மாநில பொதுச் செயலாளர். தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம் .க. எண்.6. ஏகாம்பரம் தெரு. பம்மல் . சென்னை. 75.
பெறுதல் ...
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள். தமிழ்நாடு அரசு .
புனித ஜார்ஜ் கோட்டை.
சென்னை.9.
வழி ...மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள்.
பொருள்..
தனியார் சுயநிதி பள்ளிகளின் காலாவதியான கல்வி கட்டண நிர்ணயக்குழு தலைவர் மற்றும் குழுவை கலைத்திட வேண்டி வேண்டுதல் விண்ணப்பம்.
மாண்புமிகு. ஐயா வணக்கம்.
தமிழகத்தில் செயல்படும் சுமார் 20000 சுயநிதி பள்ளிகள் நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளுக்கான கல்விக் கட்டண நிர்ணயக் குழு திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்டு பல்வேறு குளறுபடிகள் உடன் இன்றும் செயல்பட்டு வருகிறது.
மாண்புமிகு.தமிழக முதல்வர் மாண்புமிகு.பள்ளி கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு.சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அவர்களின் ஒப்புதலுடன் ஓய்வுபெற்ற நீதிபதிகளான மாண்புமிகு கோவிந்தராஜன் ரவிராஜன் சிங்காரவேலன் மாசிலாமணி ஆகியோரை இக் கல்வி கட்டண நிர்ணயக் குழு தலைவர்களாக மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை நியமிப்பது வழக்கம். இக்குழுவுக்கு ஒரு சிறப்பு அதிகாரியும் நியமிக்கப்பட்டனர்.
இக்கல்வி கட்டண நிர்ணய குழுவால் ஒரே ஒரு பள்ளி கூடம் கூட பயன் அடையவில்லை. இக்குழு ஒரு பள்ளிக்கூடத்திற்குகூட நியாயமான கல்விகட்டணத்தை நிர்ணயிக்க வில்லை.
அரசு சொல்லி விட்டது அரசாணை வெளியிட்டு விட்டது என்பதற்காக இக்குழுவில் அனைத்து தனியார் பள்ளி நிர்வாகிகளும் தங்கள் வரவு செலவு கணக்குகளை கொண்டுபோய்க் கொடுத்து அதில் எதையும்முழுமையாக ஏற்றுக்கொண்டு நியாயமான கட்டணத்தை நிர்ணயிக்கவில்லை.
பள்ளி நிர்வாகிகள் ஒவ்வொருவரையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி குற்றவாளியை விசாரிப்பது போல் விசாரித்து நியாயமற்ற கல்வி கட்டணத்தை தான் நிர்ணயித்தார்கள்.
தமிழகத்தில் ஒவ்வொரு பள்ளிக்கும் ஒவ்வொரு விதமான கட்டணத்தை தான் ஒவ்வொரு முறையும் நிர்ணயித்தார்கள். இக்கல்வி கட்டண நிர்ணயக் குழு நிர்ணயித்துள்ள கல்விக் கட்டணம் சட்டப்படியும் நியாயப்படியும் தர்மப்படியும்
ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல... என்று எல்லா பள்ளி நிர்வாகிகளும் மிகுந்த மனவேதனையோடு வேறு வழியில்லாமல் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
இக் கட்டண நிர்ணயக் குழு நிர்ணயித்துள்ள கட்டணத்தை வைத்துக்கொண்டு நிச்சயம் தனியார் பள்ளிகளை நடத்திட முடியாது.
எனவே தனியார் பள்ளி நிர்வாகிகள் தங்கள் ஆட்சி அதிகாரம் அரசியல் செல்வாக்கு வசதி வாய்ப்புகள் பெற்றோர்களின் இன்ப துன்ப நிலைக்கு ஏற்றவாறு மனிதாபிமான அடிப்படையில் கல்வி கட்டணத்தை வசூலித்து வருகிறார்கள்.
கல்விக் கட்டண நிர்ணய குழுவில் ஆட்சி அதிகாரத்திற்கு ஏற்றவாறு அங்கு பணிபுரியும் ஊழியர்களிடம் அதிகாரம் படைத்த சில பள்ளி நிர்வாகிகள் பணம் கொடுக்கல் வாங்கலுக்கு ஏற்றவாறு கல்வி கட்டணத்தை நிர்ணயித்த வரலாறுகள் ஏராளம்.
கல்விக் கட்டணத்தை 4 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை நிர்ணயம் செய்வது மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் உள்ளதை தங்கள் மேலான கவனத்திற்குக் கொண்டு வருகிறோம்.
கல்விக் கட்டணம் நிர்ணயிக்கும் ஊழியர்கள் யாரும் ஆடிட்டர்கள் அல்ல அவர்கள் பள்ளி நிர்வாகிகளின் வரவு செலவு கணக்குகளை தணிக்கை செய்த வரவு செலவு கணக்குகளில் எண்ணற்ற முரண்பாடுகள்.
பள்ளி நிர்வாகிகள் யாரும் அதற்காக மேல்முறையீடுகளை உயர்நீதிமன்றத்தில் செய்வதில்லை. கல்வி கட்டண நிர்ணயக் குழு நிர்ணயிக்கும் கட்டணத்தை பெற்றோர்களும் செலுத்துவதில்லை. பள்ளி நிர்வாகிகளும் நிர்ணயித்த கட்டணத்தை வாங்குவதில்லை. நிர்ணயிக்கும் கட்டணத்தை குறைத்து வாங்கும் பள்ளி நிர்வாகிகளும் இருக்கிறார்கள்.
எனவே இக்குழுவை ஏமாற்றவும் கல்வி கட்டண நிர்ணயக் குழு பள்ளி நிர்வாகிகளை ஏமாற்றவும் பள்ளி நிர்வாகிகள் பெற்றோரை ஏமாற்றமவும் இனியும் தமிழக அரசு இடம் தராமல் காலாவதியான கல்வி கட்டண நிர்ணயக் குழுவை தயவுசெய்து உடனே கலைத்து விடுங்கள்
இதற்காக இக் கட்டண நிா்ணயக்குழுவுக்கு ஆண்டுக்கு கோடிக்கணக்கான ரூபாய்களை வீணாக அரசு செலவழித்திட வேண்டாம் என்றும் வேண்டுகின்றோம்.
தமிழகத்திலுள்ள சி பி. எஸ். சி. ஐ. சி. எஸ் சி , ஐ பி. கேம்பிரிட்ஜ் பள்ளிகளுக்கு கல்வி கட்டணம் நினைக்காதபோது தனியார் சுயநிதி பள்ளிகளுக்கு மட்டும் கல்வி கட்டணம் நிர்ணயிப்பது ஏற்புடையதல்ல.
தமிழக அரசு ஒரு மாணவனுக்கு குறைந்தது 32000 ரூபாய் செலவு செய்கிறது. ஆனால் தனியார் பள்ளிகளுக்கு நிர்ணயிக்கும் கட்டணமோ மிகவும் குறைவு.எனவே தமிழக அரசு தனியார் பள்ளிகளுக்கான கல்விக் கட்டண நிர்ணயிக்கும்போது அரசு ஒரு மாணவனுக்கு எவ்வளவு செலவு செய்கிறதோ அதை கணக்கிலும் கவனத்திலும் கொண்டு
எல்.கே.ஜி. யு.கே.ஜி. வகுப்புகளுக்கு ஒரு கட்டணமும்
ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஒரு கட்டணமும்
ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை ஒரு கட்டணமும்
9... 10-க்கு ஒரு கட்டணமும்
11. 12ஆம் வகுப்புக்கு ஒரு கட்டணமும் நிர்ணயித்தால்..... கல்வி கட்டண பிரச்சனை தீரும் .
அதை விடுத்து 12000 பள்ளிகளுக்கும் 12 ஆயிரம் வகையான கல்வி கட்டணம் நிர்ணயித்
திருப்பதால் பொதுமக்கள் பெற்றோர்கள் பள்ளி நிர்வாகிகள் அனைவருக்கும் பெரிய குழப்பமாகவும் சந்தேகமாகவும் உள்ளது.
எனவே மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணவும் அரசின் வீண் செலவை குறைக்கும் சுயநிதி பள்ளிகளுக்கான கல்விக் கட்டண நிர்ணயக் குழு தலைவர் மற்றும் குழுவினரை இந்த ஆண்டு முதல் புதிதாக நியமிப்பதை கைவிட்டு தனியார் சுயநிதி பள்ளிகளின் இயக்குனரின்ஆலோசனையின் பேரில் தமிழக அரசு அரசுப் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவனுக்கு அரசு எவ்வளவு செலவு செய்கிறதோ அதை கட்டணமாக நிா்ணயித்துவிட்டால் அந்த கட்டணத்தை வசூலித்து கொள்ள தனியார் பள்ளி நிர்வாகிகள் சம்மதிக்கிறோம்.
அதற்கு மேல் கட்டணம் வேண்டுவோர் தனியார் பள்ளி இயக்குனரிடம் பள்ளிகளில் உள்ள வசதி வாய்ப்புகளை சுட்டிக்காட்டி பெற்றுக் கொள்வதற்கு அனுமதி தரவேண்டும்.
இதனால் தமிழக அரசுக்கு எந்த செலவும் இல்லாமல் தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணத்தை கட்டுப்படுத்துவது போலவும் நியாயமான கல்விகட்டணம் அனைவருக்கும் கிடைக்கவும் குழப்பம் இல்லாமல் அதையே அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி சட்டப்படி அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கவும் ஏதுவாகும்.
எனவே தமிழக அரசு காலாவதியான சுயநிதி பள்ளிகளின் கல்வி கட்டண நிர்ணயக் குழுவைஒட்டுமொத்தமாக கலைத்துவிட்டு தமிழகஅரசின் பெரும் பணிச்சுமையை பணச்சுமையை குறைக்க வேண்டுமென்று வேண்டுகின்றோம்.
தங்கள் உண்மையுள்ள
கே ஆர் நந்தகுமார் மாநில பொதுச்செயலாளர் சென்னை 25
நாள்..20. 06. 2020