10th public exam: 'ஹால் டிக்கெட்' வாங்கச் செல்லும் மாணவர்களுக்கு சிறப்பு ஏற்பாடு!!

10th public exam: 'ஹால் டிக்கெட்' வாங்கச் செல்லும் மாணவர்களுக்கு சிறப்பு ஏற்பாடு!!



பொதுமுடக்கம் காரணமாக, தமிழகத்தில் ஒத்திவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ஜூன் 15 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்கான ஹால் டிக்கெட்கள் கடந்த வியாழக்கிழமை (ஜூன் 4) முதல் வழங்கப்பட்டு வருகின்றன.

 

தேர்வெழுத உள்ள மாணவர்கள் தங்களது பள்ளித் தலைமையாசிரியர் மூலமாக ஹால் டிக்கெட்களை நேரில் பெற்றுக் கொள்ளலாம் அல்லது இணையதளத்தில் இருந்து இதனை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்திருந்தது.

அத்துடன் தேர்வெழுத உள்ள மாணவர்கள் அனைவருக்கும் தலா இரண்டு முகக் கவசங்கள் அளிக்கப்படும் எனவும் பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

 

இந்த நிலையில், கொரோனா நோய்த்தொற்று அதிகமுள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவர்கள், தாங்கள் பயிலும் பள்ளிகளுக்குச் சென்று ஹால் டிக்கெட் பெற வசதியாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று எம்டிசி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நாளை (ஜூன்8) முதல் ஜூன் 13 ஆம் தேதி வரை, மொத்தம் 63 வழித்தடங்களில், 109 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.




இந்த சிறப்புப் பேருந்துகளில் தலா 24 பேர் வீதம் பயணிக்கலாம். பயணத்தின்போது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் முக கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். மாணவர்கள் இலவசமாகவும், ஆசிரியர்கள் பயணக் கட்டணம் செலுத்தியும் இப்பேருந்துகளில் பயணிக்கலாம் என்றும் எம்டிஏ தெரிவித்துள்ளது.





சிறப்புப் பேருந்துகளை மாணவர்கள் அடையாளம் காண வசதியாக, இவற்றில் பள்ளிக் கல்வித் துறையின் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் வீட்டிலிருந்து பள்ளிக்கு செல்லவும், மீண்டும் வீட்டிற்கு வரவும் ஏதுவாக சிறப்புப் பேருந்துகளை இயக்க அரசு ஏற்பாடு செய்துள்ளது. தேர்வுப் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் உள்ளிட்டோரும் அப்பேருந்தில் பயணிக்கலாம் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.