மோட்டார் வாகன ஆவணங்களை புதுப்பிக்க கூடுதல் கால அவகாசம்: மத்திய அரசு அறிவிப்பு!
கொரோனா பிரச்னையை கருத்தில்கொண்டு, மோட்டார் வாகனங்களுக்கான பல்வேறு ஆவணங்களுக்கான செல்லுபடியாகும் காலத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது.
கொரோனா ஊரடங்கால் அனைத்து வர்த்தக மற்றும் அலுவலக செயல்பாடுகளும் முடங்கி இருக்கின்றன. இந்த சூழலில், மக்களின் நலன் கருதி பல்வேறு அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், மோட்டார் வாகனங்கள் தொடர்பான பல்வேறு ஆவணங்களை புதுப்பிப்பது உள்ளிட்டவற்றிற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 1 முதல் வாகனங்கள் தொடர்பான ஆவணங்களை போக்குவரத்து அலுவலங்களில் சரிபார்ப்பது மற்றும் காப்பீடு புதுப்பிப்பது உள்ளிட்ட நடைமுறைகள் நிலுவையில் இருந்து வருகிறது.
இதனை கருத்தில்கொண்டு, வாகனங்கள் மற்றும் அதன் காப்பீடு தொடர்பான ஆவணங்களுக்கான காலாவதி தேதி வரும் ஜூலை 31ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதுவரை பழைய ஆவணங்களே செல்லுபடியாகும் என்று மத்திய நெடுஞ்சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.
ஓட்டுனர் உரிமம், வாகனத்திற்கான தகுதிச் சான்று, பதிவுக் கட்டணம், காப்பீட்டு ஆவணங்கள் வரும் ஜூலை 31ந் தேதி வரை செல்லுபடியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, வாகன உரிமையாளர்கள் சந்தித்த நடைமுறை பிரச்னைகளை மனதில் வைத்து இந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளதாக போக்குவரத்துத் துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், பழைய ஆவணங்களை புதுப்பிக்கும்போது தாமதம் ஏற்பட்டால் அபராத கட்டணம் வசூலிக்கப்படாது என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே ஜூன் 30 வரை கொடுக்கப்பட்ட செல்லுபடி காலம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
வாகன உரிமையாளர்கள் ஏற்கனவே கட்டணத்தை செலுத்தி, போக்குவரத்து அலுவலகம் அல்லத காப்பீடு அலுவலகத்தில் புதுப்பிக்க முடியாத சூழல் இருந்தால், பழைய ஆவணத்தை ஜூலை 31ந் தேதி வரை பயன்படுத்த முடியும். தாமதக் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.இதனிடையே, வர்த்தக ரீதியில் இயக்கப்படும் வாகனங்களுக்கான ஆண்டு வரி மற்றும் காலாண்டு வரியை செலுத்துவதற்கான கால அவகாசத்தை வரும் ஜூன் 30 வரை வழங்கி இருக்கிறது தமிழக அரசு. இதனால், வர்த்தக வாகனங்களை இயக்குவோருக்கு சற்றே தளர்வு கிடைத்துள்ளது.