பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு  போலி அட்டவணையை நம்பாதீா்கள்!

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு  போலி அட்டவணையை நம்பாதீா்கள்!


பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பான போலியான தேர்வு அட்டவணை சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.

கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. முதலில் ஏப்ரல் 14 ஆம் தேதி வரையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, பின்னர் மே 3 ஆம் தேதி வரையில் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. பொதுத்தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.


தமிழகத்தைப் பொறுத்தவரையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பன்னிரண்டாம் வகுப்பில் ஒரே ஒரு பாடத்துக்கு மட்டும் பல மாணவர்கள் தேர்வு எழுதாததால், அந்த தேர்வு மட்டும் மறுபடியும் நடத்தப்பட உள்ளது.

இதனிடையே பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்குமா நடக்காதா என்ற குழப்பங்கள் மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் எழுந்தது. எதிர்கட்சிகள் உள்பட பல்வேறு தரப்பினரும் பத்தாம் வகுப்பு தேர்வை ரத்து செய்யும்படி கோரிக்கைகள் வைத்தனர்.

ஆனால், வேலைவாய்ப்புக்கும், மேற்படிப்புக்கும் பத்தாம் வகுப்பு தேர்வு மதிப்பெண் முக்கியமானது என்பதால், கண்டிப்பாக நடத்தப்படும் என்றும், தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்தது.

 

இந்த நிலையில், பத்தாம் வகுப்பு தேர்வு தேதி குறித்து அட்டவணை ஒன்று சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த அட்டவணையில் மே 20 முதல் 29 ஆம் தேதி வரையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கல்வித்துறை வட்டாரங்கள் கூறுகையில், அரசு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமான தேர்வு அட்டவணை மே 3ஆம் தேதிக்கு பிறகு வெளியிடப்படும். அது மட்டுமே உண்மையானது. மற்றபடி சமூகவலைதளங்களிலோ, வேறு இணையதளங்களில் வரும் தகவல்களையோ நம்ப வேண்டாம் என்று தெரிவித்தனர்