வாழ்வில் மகிழ்ச்சியாக இருப்பதற்கு இந்த ஒழுக்கங்கள் மிகமிக முக்கியம்!
நீ தனிமையில் இருக்கும் போது உன்னுடைய எண்ணங்கள் எப்படி உள்ளதோ, என்ன காரியங்களை செய்துக் கொண்டிருக்கிறாயோ அது தான் உன்னுடைய வாழ்க்கையை தீர்மானிப்பதாக சுவாமி விவேகானந்தர் கூறுகிறார்.
இது ஆன்மீக பாதை மட்டுமல்ல, அன்றாட வாழ்க்கைப் பாதைக்கும் பொருந்தும். ஒரு மனிதனின் வாழ்க்கையில் படும் கஷ்டங்களுக்கும், சோகங்களுக்கும் அவனின் ஒழுக்க பழக்க வழக்கங்களும் காரணமாக அமைகிறது. அந்த வகையில், கீழ்கண்ட ஒழுக்கங்களை நீங்களும் பின்பற்றத் தொடங்கிப் பாருங்கள். ஒரே வாரத்தில் நீங்களே உங்களுக்குள் ஏற்படும் மாற்றத்தை உணருவீர்கள்.
காலம் தாழ்த்துதல்: காலையில் லேட்டாக எழுந்திருப்பது, சரியான நேரத்துக்கு அலுவலகத்துக்கு செல்லாமல் இருப்பது, குறித்த நேரத்தில் வேலை முடிக்காமல் இருப்பது போன்றவைகள் மிகமிக கெட்டப் பழக்க வழக்கமாகும்.
காலையில் லேட்டாக எழுந்திருத்தால், அன்றைய தினத்தின் மொத்த வேலைகளும் காலதாமதம் ஆகும். சாதனை மனிதர்களின் வாழ்க்கை வரலாற்றை பார்த்தால், அவற்றில் பெரும்பாலானோர் காலையில் 4 மணிக்கு எழுந்திருக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருப்பார்கள். அல்லது காலையில் 4 மணிக்கு எழுந்திருப்பவர்கள், சாதனை மனிதர்களாக மாறுவர்.
உடலை கெடுக்கும் பழக்கங்கள்: மது அருந்துதல், புகைப்பிடித்தல் இன்னும் தேவையற்ற உணவு வகைகளை உட்கொள்ளுதல் போன்ற உடலைக் கெடுக்கும் பழக்க வழக்கத்தை எக்காரணம் கொண்டும் தொடாதீர்கள். ஏற்கனவே, இது போன்ற பழக்கத்தில் இருப்பவர்களும் படிப்படியாக அதிலிருந்து வெளியே வாருங்கள்.
இப்போதைய காலக்கட்டத்தில் இந்த பழக்க வழக்கங்கள் அனைத்தும் சர்வ சாதாரணமாகி விட்டது. ஆனால், இது உடலுக்கும், மனதிற்கும் கொடிய விஷத்தை ஏற்படுத்திவிடும். கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவு காலத்தில், மது கிடைக்காமல், ஆல்கஹால் சானிடைசர் உட்கொண்டு உயிரை விட்டவர்கள் குறிப்பிடத்தக்கது.
பணத்தை கணக்கு வைத்துக் கொள்ளுங்கள்: நேரத்தை போன்று பணமும் இன்றியமையாதது. நம்மில் பலர் எவ்வளவு ரூபாய் செலவு செய்கிறோம், தேவையற்ற செலவு செய்கிறோமா, ஆடம்பர செலவு செய்கிறோமா என்பதை பற்றியெல்லாம் கண்டு கொள்வதே இல்லை. ஆடம்பரமாக செலவு செய்வதில் தவறில்லை. ஆனால், அதற்கென வரம்பு உள்ளது.
எனவே, சம்பாதிக்கும் பணத்தை எப்போது, எப்படி செலவு செய்கிறோம் என்பதை கணக்கில் வைத்துக் கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இல்லையெனில், பணம் வருவதும் தெரியாது, போவதும ்தெரியாது. அதையே நினைத்து வருத்துப்பட்டுக் கொண்டிருப்பார்கள்.
தினசரி உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அதற்காக ஜிம் சென்று உடலை கட்டுமஸ்தாக வைத்திருக்க வேண்டும் என்று அவசியமில்லை. தினமும் ஒரு அரை மணி நேரம் சாதாரணமாக எளிய முறை உடற்பயிற்சி செய்தாலே போதுமானது. அதிகாலை எழுந்ததும் முதல் அரை மணி நேரம் கை, கால், முதுகு தண்டுவடம், அக்குப்பிரஷசர் போன்ற யோகாசனங்களை செய்யலாம். இதற்கு பெரிய செலவு ஆகி விடாது. எனவே, உடற்பயிற்சி செய்து ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.
புத்தகங்கள் வாசிக்கலாம்: தற்போது செல்போன், இன்டர்நெட் போன்றவை மிகவும் பிரபலமாகி விட்டதால், பெரும்பாலோனார் வீடியோ பார்த்துக் கற்றுக் கொள்கிறார்கள். அதுவும் நல்ல பழக்கம் தான். இருப்பினும் தொடர்ந்து வீடியோ பார்த்துக் கொண்டிருந்தால் அதுவும் பாதிப்பை ஏற்படுத்தும்.
எனவே, அது போன்ற நேரங்களில் புத்தகத்தை வாசிக்கலாம். தினமும் ஒரு புத்தகத்தில் குறைந்தது 20 பக்கங்களாக வாசித்துப் பாருங்கள். தினமும் குறைந்தது அரை மணி நேரம் புத்தகம் வாசிப்பதற்காகவே ஒதுக்கிக் கொள்ளுங்கள். அவரவர் நிலைமைக்கு ஏற்ப நல்ல சுயமுன்னேற்ற நூல்கள், வாழ்க்கை தத்துவ புத்தகங்களை வாசிக்கலாம்.