பள்ளிகள் திறப்பு தள்ளி போகுமா,,,?
கொரோனா வைரஸ் பரவுதல் காரணமாக நாடு முழுவதும் மே 3 ஆம் தேதி வரையில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் மார்ச் 22 ஆம் தேதி முதல் பள்ளி, பல்கலைக்கழக கல்லூரி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முழுவதுமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 வில் ஒரே ஒரு பாடத்துக்கான தேர்வு மட்டும் எழுதாதவர்களுக்கு, மறு தேர்வு நடத்தப்படுகிறது.
இப்படியான சூழலில் தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறப்பு என்பது ஜூலை மாதம் ஆகி விடும் என்று ஆசிரியர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக அவர்கள் கூறுகையில், ‘தமிழகத்தில் பத்தாம் வகுப்பு நடைபெறுமா, நடைபெறாதா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்தே தீரும் என்று தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது. எனவே, முதலில் பத்தாம் வகுப்பு தேர்வு நடைபெறும். தேர்வுக்கு 15 நாட்கள் முன்பாக அதற்குரிய கால அட்டவணை வெளியிடப்படும்.
மே 3 ஆம் தேதி வரையில் ஊரடங்கு உள்ளது. அதற்குப் பிறகு தான் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்குரிய தேர்வு மையங்கள் அமைத்தல், அறை ஒதுக்கீடு, மாணவர்களின் பெயர் விவரப் பட்டியல் தயாரித்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெறும். எனவே, பொதுத்தேர்வு நடத்தி முடிப்பதற்கு மே இரண்டாம் வாரம், மூன்றாம் வாரம் ஆகி விடும். அதன் பிறகு விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெறும். இவை அனைத்தும் முடிந்த பிறகு, கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் வகையில், பள்ளி வளாகம் முழுவதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும்.
இதனிடையே 2020-21 கல்வியாண்டிற்கான பாடப்புத்தகங்கள், சீருடைகள், ஆய்வக உபகரணங்கள் போன்றவைகளுக்கான டென்டரை முடிவு செய்ய வேண்டும். இவை அனைத்தும் முடிப்பதற்கு குறைந்தது 15 முதல் 20 நாட்கள் வரையில் ஆகும். ஒட்டு மொத்தமாக பார்த்தால், ஜூன் இறுதி வாரம் ஆகி விடும். இந்த செயல்பாடுகள் ஒரு புறம் இருந்தாலும், கொரோனா வைரஸ் பரவுதலை தடுப்பதற்கான ஊரடங்கு உத்தரவு எப்போது முடியும் என்று தெரியாது. ஒரு வேளை ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டால், பள்ளிகள் திறக்கப்படுவது மேலும் தாமதாகும்.