கொரோனாவால் தேர்வுகள் முடக்கம்.. அடுத்த 2020-21 கல்வியாண்டு எப்படி இருக்கும்?
ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மாணவர்கள் நுழைவுத்தேர்வுகள் எழுதி பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் சேருகின்றனர்.. ஆனால், இந்தாண்டு கொரோனா வைரஸ் தாக்கத்தால், எல்லா தேர்வுகளும் முடங்கி விட்டது. நுழைவுத்தேர்வுகள் நடத்தமுடியாத சூழல் உருவாகியுள்ளது. குறிப்பாக JEE, NEET UG 2020 நுழைவுத்தேர்வுகள் மே மாத இறுதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தேசிய தேர்வு முகமையின் பொது இயக்குநர், வினித் ஜோஷி, டைம்ஸ் ஆப் இந்தியாவின் எஜூகேஷன் டைம்ஸ் பிரிவுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், ‘ஏப்ரல் மாதம், மே மாதம் தொடக்கத்தில் நடைபெறவிருந்த அனைத்து தேர்வுகளும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இதனால் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையும் உரிய நேரத்தில் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இருப்பினும் எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு, இந்த பிரச்னைக்கு தீர்வு காணுவதற்கு கல்வி நிறுவனங்களோடு ஆலோசித்து வருகிறோம். மே மாத தேர்வுகள் முழுமையும் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஈடுகட்ட நுழைவுத்தேர்வுகள் நடத்திய பின்பு, தேர்வு முடிவுகள் துரிதமாக வெளியிடப்படும். இது ஒன்று தான் வழி’ என்று தெரிவித்தார்.
இதனிடையே 2020-21 கல்வியாண்டிற்கான காலாண்டரை தயாரிக்குமாறு சிபிஎஸ்இ, NTA தேர்வு முகமைகளுக்கு மத்திய மனிதவளத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால், தற்போது நிலவி வரும் சூழலில் இதற்கான உடனடி நடவடிக்கையும் எடுக்க முடியாது.
இது தொடர்பாக சிபிஎஸ்இ செயலாளர் அனுராக் திருப்பதி கூறுகையில், ‘கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள தற்போது முழுமையான ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது முடிந்த பிறகு அரசு எவ்விதமான நடவடிக்கை எடுக்கும் என்பதை பொறுத்து தான் சிபிஎஸ்இ அடுத்தக்கட்டமாக முடிவெடுக்கும்.
பொதுவாக ஏப்ரல் 1 ஆம் தேதி சிபிஎஸ்சி பள்ளிகள் திறக்கப்படும். ஆனால், ஏப்ரல் 14 வரையில் ஊரடங்கு உள்ளதால், அதுவயைில் பள்ளிகள் மூடப்பட்டிருக்கும். சில பள்ளிகளில் டிஜிட்டல் தொழில்நுட்ப முறையில் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கி விட்டன. பல பள்ளிகளில் அதற்கான கட்டமைப்பு இல்லை’ இவ்வாறு தெரிவித்தார்.